இரண்டு பழைய புதுக்கவிதைக் 'கிறுக்கல்கள்'
கீழே பதியப்பட்டது, பொறியியல் கல்லூரி வாழ்க்கையின் கடைசி மாதங்களில் எழுதியது. அச்சமயத்தில், ஒவ்வொருவரும் அவரவர் எதிர்காலத்தைப் பற்றிய கவலையிலும், பயத்திலும் இருந்ததால், எங்களிடையே லேசான பொறாமையும், 'அவன் நம்மை மிஞ்சி விடுவானோ?' என்ற அச்சமும் சற்றே தலை தூக்கின. ஒருவருக்கொருவர் உதவி செய்யும் சூழ்நிலை சற்று பாதிக்கப்பட்டது. இதனால் எங்கள் செயல்களில் ஒருவித Negativism இருந்தது எனலாம்! அச்சூழலை (எங்களிடையே இருந்த சிலரின் நடவடிக்கைகளை), நகைச்சுவையாக வெளிப்படுத்த நான் எடுத்த முயற்சி என்று கீழிருப்பதைக் கொள்ளலாம்!
இப்பொழுதெல்லாம் ஒழிப்புலகச் சக்ரவர்த்தியாவதற்கு
காலேஜிலே பயங்கரப் போட்டி!
தான் 'GATE'க்கு படிக்கவில்லையெனில், படிக்கும் பிறருக்கும்
புத்தகம் தர மறுப்பவர் ஒரு வகை!
'PERCENTILE' தியரி அறிந்து படிப்பவரை
சினிமாவுக்கு அழைப்பவர் ஒரு வகை!
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
கும்கும்மென்று 'GATE'க்கு குத்தி விட்டு
'நான் SCOOT' என்று சிரிப்பவர் ஒரு வகை!
'ப்ராஜெக்ட் செய்வோம் வாரீர்' என்று மக்களை திரட்டி விட்டு
சமயம் பார்த்து அவரை 'த்ராட்டில்' விடுபவர் ஒரு வகை!
'GATE' எழுதும் நண்பர்கள் டிவி, சினிமா பார்க்கச் சென்றால்
மனதுள் மகிழ்பவர் ஒரு வகை!
இவர்கள் மத்தியில் நண்பர்களின் 'PERCENTILE'-ஐ
கூட்டுவதற்காகவே 'GATE'க்கு 100 ரூபாய்
தண்டம் அழுத நான் ஒரு வகை :-(
பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது எழுதிய ஒரு கவிதை அஞ்சலி கீழே.
காரீயத்திற்கு பொன்னின் மேல் இத்தனை வெறுப்பா?
இல்லையெனில் பதினாறு துண்டுகள் சேர்ந்து பாய்ந்து
நிலம் சாய்த்திருக்குமா அப்பொன் மேனியை!
இந்திய வரலாற்றுப் புத்தகத்தில் அக்டோ பர் 31
குறித்த பக்கத்தில் எழுத்துக்கள் இருக்க முடியாது,
கரைத்து விடுமே அவற்றைக் கண்ணீர்!
புனித குருத்துவாராக்கள் ஆயுதக் கிடங்குகளானால்
செயற்கை பூகம்பங்கள் நாட்டின் நலமழிக்க முயலும்!
தனி நாடு கேட்கும் கயவர் கூட்டம்
ஆளுக்கொன்றாக தங்கள் தலையிலே
'காலி ஸ்தானம்' வைத்திருக்கும்போது
எதற்கவர்க்கு புதியதொரு 'காலிஸ்தான்'!
நாட்டைத் துண்டாட எண்ணும் போர் வெறிக் கழுகுகளுக்கு
மற்றுமொரு சமாதானப்புறா பலியிடப்பட்டு விட்டது!
என்றென்றும் அன்புடன்
பாலா
0 மறுமொழிகள்:
Post a Comment